வங்கியில் கொள்ளை முயற்சி வடமாநில வாலிபர் சிக்கினார்
சென்னை : திருவல்லிக்கேணி எஸ்.பி.ஐ., வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை, தனிப்படை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி உள்ளது. நேற்று முன்தினம் காலை, ஊழியர்கள் வங்கியை திறக்க வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
உள்ளே சென்று பார்த்த போது பணம், நகை ஏதும் திருடு போகவில்லை என்பதும், திருட்டு முயற்சி நடந்திருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் திவ்யா, 35, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
இந்நிலையில், இதில் தொடர்புள்ள, வாய் பேச முடியாத வடமாநில வாலிபரை பிடித்து விசாரிக்கின்றனர்.
மேலும், சைகை மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தி, அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆவணமும் இல்லை. அவரிடமிருந்த 3 மொபைல் போன்களிலும், 'சிம் கார்டு'ம் இல்லை. இவை அனைத்தும், பாரிமுனை, பர்மா பஜாரில் வாங்கியதாக தெரிகிறது என, போலீசார் தெரிவித்தனர்.