சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரதத்தை துவக்கிய பக்தர்கள்

கோவை: கார்த்திகை மாதம் பிறந்ததால், விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள், நேற்று துளசி மாலை அணிந்து கொண்டு, சரண கோஷம் எழுப்பினர்.

கார்த்திகை மாதம் முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் பூஜைகள், சபரிமலையின் ஒரு மண்டல காலம் என அழைக்கப்படுகிறது. தொடர்ந்து, 41வது நாள் மண்டல பூஜை நடக்கும். மண்டல காலங்களில், பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதமிருந்து, இரு வேளை நீராடி, சரண கோஷம் எழுப்பி, இருமுடி ஏந்தி, சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வர்.

கார்த்திகை மாத முதல் தேதியான நேற்று, கோவை சித்தாபுதுாரில் உள்ள ஐயப்பன் சுவாமி கோவிலில், மண்டல வழிபாடு துவங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்று மட்டும் காலை, 11:00 மணி வரை, 3,200 பக்தர்கள் மாலை அணிந்து, சரண கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, களபாபிஷேகம், அகன்ட நாம பஜனை நடந்தது. மதியம், 1,500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி, இதற்கு முன்பே மாலை அணிந்த பலர், நேற்று இருமுடி கட்டி சபரிமலை சென்றனர்.

இதேபோல், ராமநாதபுரம், வடகோவை, சாய்பாபா காலனி மற்றும் கோவைப்புதுாரில் உள்ள ஐயப்பன் கோவில், ஆர்ய வைத்திய பார்மசி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் - 2 பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவில், மதுக்கரையில் உள்ள லட்சுமி நாராயணா கோவிலில், பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

Advertisement