ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர் சுருளி அருவியில் சரண கோஷம் முழங்கி வழிபாடு
கம்பம்: சுருளி அருவியில் நேற்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல துளசி மாலை அணிந்து விரதம் துவக்கினார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோயில் நடைதிறந்திருந்தபோதும், மகரவிளக்கு, மண்டலபூஜை எனும் கார்த்திகையில் துவங்கி தை மாதம் நிறைவு பெறும் இரண்டறை மாதம் முக்கிய நாட்களாகும்.கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து விரதத்தை நிறைவுசெய்வார்கள்.
நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சுருளி அருவியில் அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் குளித்து இங்குள்ள ஐயப்பன், பூதநாராயணர்,ஆதி அண்ணாமலையார்,வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தங்கள் குருசாமி மூலம் துளசி மாலை அணிந்து கொண்டனர். அப்போது சுருளி அருவியில் பலத்த சரண கோஷம் ஒலித்தது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வனத்துறையினர் அருவியில் வரிசையாக நின்று குளிக்க ஏற்பாடு செய்தனர்.
உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் படித்துறை, சின்னமனூர் சிவகாமியம்மன்கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். வழக்கமாக செல்லும் பக்தர்கள் தாங்கள் அணியும் துளசி மாலையை அணிந்தனர். புதிதாக மாலை போடும் கன்னி சாமிகள் கடைகளில் துளசி மாலை, காவி மற்றும் கறுப்பு நிற உடைகளை வாங்கிஅணிந்தனர்.
ஆண்டிபட்டி: தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பால விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். பல்வேறு கிராமங்களிலும் ஆங்காங்குள்ள கோயில்களில் பக்தர்கள் பலர் மாலை அணிந்து விரதம் துவக்கி உள்ளனர்.
தேனி: பெத்தாட்சி விநாயகர் கோயிலில் அதிகாலை 4:00 மணியில் இருந்து மாலை அணிந்து, விரதம் துவங்க பக்தர்கள் வருகை தந்தனர். துளசி மாலைகளை கோயில் குருக்கள் பக்தர்களுக்கு அணிவித்தனர். என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு வெற்றி கொம்பன் விநாயகர் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் அருகே வராகநதியில் ஐயப்ப பக்தர்கள் நீராடி, ஐஸ்வர்ய விநாயகர் கோயில் முன்பு மாலை அணிந்து விரதம் துவங்கினர். பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். 48 நாள் மண்டல பூஜை துவக்க நாளை முன்னிட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் பிரசன்னா பூஜைகள் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஞ்சளாற்றில் நீராடி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். முதன் முதலாக கோயிலுக்கு செல்லும் கன்னிசாமிகள் அதிகளவில் மாலை அணிந்தனர்.