ஐ.நா.,தூதருடன் எலான் மஸ்க் ரகசிய சந்திப்பு; கட்டுக்கதை என்கிறது ஈரான்
டெஹ்ரான்: நியூயார்க்கில் ஐ.நா.,வுக்கான ஈரான் தூதரை, டிரம்ப் அரசின் செயல்திறன் இணை இயக்குநரான எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்தாக செய்தி வெளியானது. ஆனால், 'இது பொய் தகவல், கட்டுக்கதை' என, ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்ற, டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் எப்போது வேண்டுமானாலும் முழுவீச்சில் மூளும் என்பதால், உலக நாடுகள் அச்சத்தில் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில், ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்க் ஆகிய இருவரும் நியூயார்க்கில் ரகசியமாக சந்தித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக, செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. ஆனால், 'இது பொய் தகவல், கட்டுக்கதை' என, ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது:
'இது பொய் தகவல், கட்டுக்கதை. இதன் பின்னணியில் உள்ள நோக்கங்களை ஊகிக்க முடியும். எலான் மஸக் மற்றும் ஈரானின் பிரதிநிதிக்கும் இடையேயான சந்திப்பை பற்றி அமெரிக்கா ஊடகங்கள் பொய் கதை வெளியிட்டுள்ளது. புதிய அமெரிக்க நிர்வாகம் அதன் கொள்கைகளை தெளிவுப்படுத்த வேண்டும். இதற்காக, நாங்கள் காத்திருக்கிறோம். ரகசிய சந்திப்பு நடத்த தலைமையிடமிருந்து எந்த அனுமதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.