பைக்கில் ஜி.பி.எஸ்., வைத்து 50 சவரன் பலே கொள்ளை
கோவை,: கோவை, பூ மார்க்கெட் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் குமார், 43, அவரது மனைவி சங்கீதா, 40, ஆகியோர் ஆர்.எஸ்.புரத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். அக்., 21ல் வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றனர்.
அன்று மதியம், குமாரை மொபைல் போனில் அழைத்த வீட்டு உரிமையாளர், வீட்டு கதவு திறந்திருப்பதாக தெரிவித்தார். குமார் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில், தாலி செயின், காசு மாலை, ஆரம், வளையல் உள்ளிட்ட, 50 சவரன் நகைகள், 14,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில், 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த இருவர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், கொள்ளையடித்த பின், கீழே இறங்கி வருவதும் பதிவாகியிருந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் செல்வராஜை பார்த்ததும், அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்ற காட்சியும் பதிவாகியிருந்தது.
அப்பகுதியில் இருந்த பல்வேறு சிசிடிவி பதிவுகளை கொண்டு, திருடர்களை போலீசார் தேடினர். இருவரும், ஆர்.எஸ்.புரத்தில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்றதும், வாகன பதிவு எண் வாயிலாக கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து, பாலக்காடு பள்ளி வீதியை சேர்ந்த ஜாகீர் உசேன், 49, மோனீஸ், 24, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 50 சவரன் நகைகளும் மீட்கப்பட்டன.
குமாரின் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க, ஜாகீர் உசேன் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்தார். அவரது நடமாட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில், குமாரின் இருசக்கர வாகனத்தில், 'மேக்னட்டிக்' ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி உள்ளார்.
பின், அவர் எங்கு செல்கிறார்; எப்போது வீட்டில் இருந்து கிளம்புகிறார் என, தொடர்ந்து ஒரு வாரம் கண்காணித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை ஜி.பி.எஸ்., வாயிலாக உறுதி செய்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளி மோனீஸ் ஆகிய இருவரும் சென்று கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
ஜாகீர் உசேன் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு, அவர்களிடம், 'ஸ்பெஷல் பிராஞ்ச்' போலீஸ் எனக்கூறி, பணம் பறித்துச் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
இது தொடர்பாகவும், அவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன என, போலீசார் தெரிவித்தனர்.