மேகமலை சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா
கம்பம்: மேகமலையில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறை கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளும் செய்வதில்லை. மாலை 5 மணியுடன் ஹைவேவிஸ் ரோடு மூடுவதால் அதற்குள் திரும்பிவிட அறிவுறுத்துகின்றனர். மேகமலை சூழல் சுற்றுலாவிற்கு அனுமதிக்க வனத்துறை பரிசீலித்து வருவதாக சில ஆண்டுகளாகவே கூறுகின்றனர்.ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த சூழல் சுற்றுலா இருக்கும் என்று கூறப்பட்டது. இருக்கைகள், பார்க், பேட்டரி கார்கள், மணலாறு அணையில் படகு சவாரி, ஒட்டல், தங்கும் விடுதி, டிரக்கிங் என பல வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது. அவ்வாறு செய்தால் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு இணையாக வருவார்கள். தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருப்பது போன்று சூழல் சுற்றுலாவை செயல்படுத்தலாம்.
ஏற்கெனவே தமிழக அரசு மேகமலையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இருந்தபோதும் புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால், வனத்துறை கட்டுப்பாட்டில் தான் சுற்றுலா நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என வனத்துறை கூறுகிறது. சூழல் சுற்றுலாவை செயல்படுத்தினால் நல்ல வருவாய் கிடைக்கும். இதில் வனப்பகுதிகளில் மேம்பாடு, வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இந்த நிதியை பயன்படுத்தலாம். எனவே மேகமலை சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.