ரூ.2.5 கோடியில் முதல்வர் அலுவலகம்: புதுப்பிக்க பா.ஜ., கண்டனம்

பெங்களூரு : முதல்வர் சித்தராமையாவின் அலுவலகத்தை 2.5 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தி வருவதற்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.


பெங்களூரு, விதான்சவுதாவின் மூன்றாவது மாடியில் 323 எண் கொண்ட அறை, முதல்வர் சித்தராமையாவின் அலுவலகமாகும். இந்த அறையை பொதுப்பணித்துறை, 2.5 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகிறது.


அறை ஆடம்பரமாக மாற்றப்படுகிறது. அறையின் உள்பகுதி அடியோடு மாற்றப்படுகிறது. கழிப்பறை தரை, சுவர்கள், சீலிங், ஓய்வறை என, அனைத்தும் ஹைடெக்காக மாற்றப்படுகிறது. இரண்டு மாதங்களாக இப்பணிகள் நடந்துவருகின்றன.

ஊடகத்தினர் கவனத்துக்கு வராமல், ரகசியமாக செய்யப்படுகிறது. இதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. மக்களின் வரிபணத்தை வீணாக்குவதாக பா.ஜ., கண்டித்துள்ளது.

பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியதாவது:

மக்களுக்கு செலவிட வேண்டிய வரிப்பணத்தை, முதல்வர் சித்தராமையா, தன் அலுவலகத்தை நவீனப்படுத்த பயன்படுத்துகிறார். இது தேவையா? சமீபத்தில் துணை முதல்வர் சிவகுமார், தன் வசிக்கும் அரசு இல்லத்தை 1.38 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தி உள்ளார்.

அரசு விடுதிகளில், அடிப்படை வசதிகள் இல்லை. இதை சரி செய்ய என்ன செய்தீர்கள்?

உடனடியாக பணிகளை நிறுத்திவிட்டு, வரிப் பணத்தை மக்களின் வளர்ச்சிக்காக செலவிடவேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement