மூன்றே மாதங்களில் இடிந்த பாலம்
பெலகாவி: மாஞ்சரி கிராமம் அருகில், 6.50 கோடி ரூபாய் செலவில் கட்டி, மூன்று மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் மாஞ்சரி கிராமத்தின் அருகில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே, மாஞ்சரி - பவனசவுந்தத்தி இடையே, பொதுப்பணித்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டது. இதற்காக 6.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும், ராய்பாக், சிஞ்சலி, குடச்சி, திக்கேவாடி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு இடையே, தொடர்பை ஏற்படுத்தும் நோக்கிலும் பாலம் கட்டப்பட்டது. இது தடுப்பணையாகவும் செயல்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்பு தான், இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தது.
சில நாட்களாக கன மழை பெய்ததால், பாலம் இடிந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்ததால், கிராமத்தினர், விவசாயிகளின் அன்றாட போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தரமற்ற பணிகளே, இடிந்து விழ காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பணிகளை நடத்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
பாலம் இடிந்ததால், மக்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம், வெவ்வேறு கிராமங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தியது. இதை உடனடியாக பழுது பார்க்க வேண்டும். ஒப்பந்ததாரர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சித்தார்த் காயோகோள்,
சமூக ஆர்வலர்