கிரிக்கெட் மட்டையால் மகனை அடித்து கொன்ற தந்தை கைது
குமாரசாமி லே - அவுட்: பள்ளிக்கு சரியாக செல்லாமல், மொபைல் போனில் விளையாடிக் கொண்டு இருந்த மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு குமாரசாமி லே- - அவுட்டில் வசிப்பவர் ரவிகுமார், 44. இவரது மகன் தேஜஸ், 14. தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.
கடந்த 20 நாட்களாக தேஜஸ் பள்ளிக்கு சரியாக செல்லவில்லை. எந்த நேரம் பார்த்தாலும் மொபைல் போனில் 'கேம்' விளையாடிக் கொண்டு இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, தேஜஸ் மொபைல் போனில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்த்ததுடன், ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டு இருந்தார்.
குடிபோதையில் வீட்டிற்கு வந்த ரவிகுமார், பள்ளிக்கு சரியாக செல்லாதது குறித்தும், மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவது பற்றியும் கேட்டார். இதற்கு தேஜஸ் சரியாக பதில் சொல்லவில்லை.
ஆத்திரம் அடைந்த ரவிகுமார் வீட்டில் கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து, மகனை சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த தேஜஸ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். ரவிகுமாரை குமாரசாமி லே- - அவுட் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.