பட்டுப்போன மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த பெரியகளக்காடி கிராமத்தில் போந்துார் - அச்சிறுப்பாக்கம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இச்சாலையை போந்துார், பெரியகளக்காடி, முத்துவிநாயகபுரம், கயப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனம், கார், லாரி என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
பெரியகளக்காடி- - போந்துார் கூட்ரோடு இடையே, சாலையோரத்தில் பழமையான காட்டுவாகை மரம் பட்டுப்போய் உள்ளது.
தற்போது, மழை பெய்து வருவதால், பலத்த காற்று வீசினால் கூட மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள பட்டுப் போன மரத்தை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்னர்.