மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தடத்தில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

இதனால், வழக்கமான ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு, கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

எனவே, இந்த தடத்தில் செல்லும் பயணியரின் வசதிக்காக கூடுதலாக, தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு - 10; தி.நகருக்கு -- 20, பிராட்வேக்கு - 20 என, 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன. பயணியர் அதிகரிக்கும்போது, தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பேருந்து நிலையங்களில் நேரக் காப்பாளர்களை நியமித்து, பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement