புதர்மண்டிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி எப்போது?

மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த கக்கிலப்பேட்டை அருகே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, நெல்வாய், உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இச்சாலையை 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையோரத்தில் புதர்மண்டி, பள்ளங்கள் இருப்பது தெரியாதவாறு வளர்ந்துள்ளது. எதிரே வாகனங்கள் வரும் போது வழி விடுவதற்காக, சாலையோரம் ஒதுங்கி நிற்க முடியாத சூழல் உள்ளது.

லாரிகளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு மழையில் நனையாதவாறு, தார்ப்பாயால் மூடி பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். அதன்மீது சாலையை ஒட்டி வளர்ந்துள்ள மரக்கிளைகள் பட்டு, தார்ப்பாய்கள் கிழிந்து வீணாகுவதாக, லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சாலையோரம் வளர்ந்துள்ள புதர்களை அகற்றவும், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும், நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement