அனுமதி இன்றி கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது

பவுஞ்சூர்,: பவுஞ்சூர் அடுத்த தொண்டமநல்லுார் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே, சில நாட்களுக்கு முன் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பண்ணை குட்டை அமைக்கப்பட்டது.

பண்ணை குட்டை அமைக்கும் போது தோண்டி எடுக்கப்பட்ட கிராவல் மண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் அனுமதியின்றி டிராக்டரில் திருடிச் செல்வதாக, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற தொண்டமநல்லுார் கிராம நிர்வாக அலுவலர் வீரக்குமார் 45, அனுமதியின்றி கிராவல் மண் திருடிய டிராக்டரை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றது.

மேலும், மண் அள்ளிக் கொண்டிருந்த நபர்கள், இரு டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர் வீரக்குமார் தகவல் தெரிவித்தார்.

விசாரணையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிதள பொறுப்பாளர் தொண்டமநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த வஜ்ஜிரவேலு 37, உதவியுடன், மடையம்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல், 21, கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், 27.

கல்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 24, தொண்டமநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர், 39, மற்றும் மாதேஷ், 22, ஆகியோர் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, வஜ்ஜிரவேலு, கோகுல், மாரியப்பன், மணிகண்டன், தனசேகர் ஆகியோரை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள மாதேஷை தேடி வருகின்றனர்.

Advertisement