நிலக்கல்லில் பக்தர்கள் வசதிக்காக மினி பஸ் 10,000 வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஏற்பாடு
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில், மண்டல காலம் துவங்கிய நிலையில், பக்தர்களின் சரண கோஷம் முழங்க நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, தந்திரி கண்டரரு ராஜீவரரு அய்யப்பன் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
காலை, 3:30 மணி-க்கு நெய்யபிஷேகம் தொடங்கியது. பக்தர்கள் கூட்டத்தால் பெரிய நடைப்பந்தல் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை நடந்தன.
தினமும் காலை, 3:00 முதல் மதியம், 1:00 மணி வரையிலும், மாலை, 3:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறியதாவது:
நவ., 15-ல் ஆன்லைன் முன்பதிவில், 26,942 பேரும், ஸ்பாட் புக்கிங்கில், 1,872 பேரும், வி.ஐ.பி.க்கள் என, மொத்தம், 30,687 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும், 70,000 பேர் ஆன்லைன் வாயிலாகவும், 10,000 பேர் ஸ்பாட் புக்கிங்கிலும் தரிசனம் செய்ய முடியும்.
வரும் நாட்களில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்து, ஆன்லைன் முன்பதிவை அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். போலீசாரின் சிறப்பான செயல்பாட்டால், 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை ஏற்றி விட முடிகிறது. இதனால் பெரிய நடைப்பந்தலில் பக்தர்களின் கூட்டம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், நிலக்கல்லில் ஏழு ஏக்கரில், 10,000 வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வாகனங்களை இங்கு நிறுத்தி, கேரள அரசு பஸ்சில் சென்று தரிசனம் முடித்து திரும்பும் போது, களைப்பில் வாகனங்களை தேடி நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
சில தனியார் வாகனங்கள் இவ்வாறு தேடி அலையும் பக்தர்களை அழைத்துச்செல்ல அதிக கட்டணம் வசூலித்து வந்தனர்.
தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றம் நியமித்த தனி அதிகாரி ஜெயகிருஷ்ணன், கேரள போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், பக்தர்கள் தங்கள் வாகனங்கள் நிற்கும் பகுதிக்கு செல்ல கேரள அரசு போக்குவரத்து கழகம் இலவசமாக மினி பஸ்களை இயக்க வேண்டும் என, கூறினார்.
போக்குவரத்து துறை, 10 ரூபாய் கட்டணத்தில் இன்று முதல் பஸ்களை இயக்கும் என, அமைச்சர் கணேஷ்குமார் கூறியுள்ளார்.