பூவன் வாழை விலை வீழ்ச்சி கவலையில் விவசாயிகள்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் காவிரி படுகை பகுதியான திருக்காட்டுபள்ளி, கோவிலடி, வளப்பகுடி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 11,000 ஏக்கரில் வாழை சாகுபடி நடக்கிறது. இதில், திருவையாறு பகுதியில் அதிகளவில், பூவன் ரக வாழையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபரில் பூவன் வாழைப்பழம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கிலோ 5 -- 7 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட வாழை விவசாயிகள் சங்க தலைவர் மதியழகன் கூறியதாவது:
கடந்த மாதம் மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு கூட வாழைப்பழங்களை அனுப்பினோம். கடந்த மாதம் வரை ஒரு தார் 300 -- 600 ரூபாய் வரை விற்பனையானது.
தற்போது, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மழைக்காலமாக இருப்பதால், பூவன் வாழைப்பழம் பயன்பாடு குறைவாக இருக்கும். அத்துடன், பொதுமக்கள் பெரும்பாலும் பூவன் வாழைப்பழங்களை சாப்பிட்டால் சளி, இருமல் வரும் என, தவிர்க்கின்றனர். இதனால் வியாபாரிகளும் பூவன் வாழைப்பழம் விற்பனையை குறைத்து விட்டனர்.
அறுவடை செய்யப்படும் வாழைப்பழங்கள் கிலோக் கணக்கில் தேக்கமடைந்துள்ளன. திருவையாறு பகுதியில் தனியார் ஏலதாரர்களை நம்பியே வாழை விவசாயிகள் இருக்க வேண்டியிருப்பதால், இங்கு அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஏற்படுத்தி வாழை வியாபாரத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.