நெல்லையில் ஜாதி மோதலில் தொடர்ச்சியாக 6வது கொலை நெல்லையில் மீண்டும் பதற்றம்; 3 பேர் கோர்ட்டில் சரண்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரத்தில், 2010ல் ஒரு ஜாதியின் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு, 2013 அக்டோபரில் தர்மராஜ், 27, கோபாலசமுத்திரம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். அதற்கு பழிக்குப்பழியாக சில நாட்களுக்கு பிறகு மற்றொரு சமூகத்தை சேர்ந்த கார்த்திக் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரு தரப்பிலும் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
கார்த்திக் கொலைக்கு பழிவாங்க மந்திரம் என்பவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அதன் பிறகு, 2021 செப்., 13ல் வழுவூர்பட்டியில் சங்கரசுப்பிரமணியன், 38, கொலை செய்யப்பட்டார். அவரது தலை ஏற்கனவே கொலை செய்யப்பட்ட மந்திரத்தின் சமாதியில் வைக்கப்பட்டது.
சங்கரசுப்ரமணியன் கொலைக்கு பழிவாங்க, 2021 செப்., 15ல் மாரியப்பன், 35, கொலை செய்யப்பட்டு தலை வீசப்பட்டது.
இவ்வாறு அடுத்தடுத்து இரு ஜாதியினரின் மோதல் சம்பவங்களால் பிரான்சேரி, கோபாலசமுத்திரம், கொத்தங்குளம் உள்ளிட்ட எட்டு கிராமங்களில் பதற்றம் தொற்றியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேலப்பாளையம் அருகே கருங்குளம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்த கீழச்செவலைச் சேர்ந்த மணிகண்டன், 28, மூவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுவும் ஏற்கனவே நடந்த ஜாதி மோதலில் நடந்த பழிவாங்கும் சம்பவமாகும்.
இதில், தேடப்பட்ட கொலையாளிகள் ஆனந்தராஜ், மகாராஜன் என்ற ஒரே பெயரில் இருவர், நேற்று திருநெல்வேலி கோர்ட்டில் சரணடைந்தனர். இதில், ஆனந்தராஜின் தந்தை மந்திரம் ஏற்கனவே கொலை செய்யப்பட்டார்.
தந்தை கொலைக்கு மகன் ஆனந்தராஜ் நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்துள்ளார். அடுத்தடுத்து நடந்துள்ள 6வது கொலை இது. இதனால் மீண்டும் முன்னீர்பள்ளம், கோபால சமுத்திரம் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.