இஸ்ரேல் பிரதமர் வீட்டில் 2வது முறையாக வெடிகுண்டு தாக்குதல்!
ஜெருசலேம்: கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வருடங்களாக மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புகளை அழிக்கும் வரை அவர்கள் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த அக்.,16ம் தேதி இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
தற்போது, 2வது முறையாக மீண்டும் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார். பிரதமர் வீட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு வெடிகுண்டுகள் அவரது தோட்டத்தில் விழும் சி.சி.டி.வி., காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் கார்க் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், 'இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 2வது முறையாக கொல்ல சதி நடந்துள்ளது. இதனால் பிரதமர் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் உஷாராக உள்ளனர் என பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.