ஜெயில்ல போடுற அளவுக்கு பெரிய குற்றமா? நடிகை கஸ்தூரிக்கு சீமான் ஆதரவு

26


அரியலூர் : நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மலையையும், மண்ணையும் வெட்டி விற்றவன், வித்து கொண்டிருப்பவன் எல்லாம் வெளியில் தானே இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, 'தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக' சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.


நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய, தனிப்படையினர் தேடி வந்தனர். இதனிடையே, ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (நவ.,17) ஆஜர்படுத்தினர். அவரை நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான், நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இது அவசியமற்றது, இதில் காயம் படவோ, வேதனை படவோ ஒன்றுமில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதை செய்கிறார்கள். அவர் பேசியதில் காயம்பட்டதாக சொல்கிறார்கள். நூற்றாண்டுகளாக ஒரு தமிழ் பேரினத்தை, திராவிடம் என்று சொல்லி வருகிறார்கள். நாங்கள் எவ்வளவு காயம் பட்டு இருப்போம். என்னுடைய அடையாளத்தை மறைத்து எனது இனத்திற்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்?அப்போது நாங்கள் எவ்வளவு காயம் பட்டிருப்போம். இது எல்லாம் சிறைப்படுத்தும் அளவிற்கு ஒரு குற்றமா? அதான் எனது கேள்வி.


காயம் படுவது என்றால் தி.மு.க.,வின் வாடகை வாய்கள், அவர்களது கட்சிக்காரர்கள் மற்றவர்களை பேசுவதை கேட்கிறார்கள், இல்லையா? ஒவ்வொருத்தரையும் கருத்தியலாக சண்டை போடுவது என்பது வேறு, அரசியலாக மோதுவது என்பது வேறு. கருத்து வைப்பது வேறு. தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் செய்வது, குடும்பங்களை பற்றி பேசுவது, தாய், தந்தையரை பற்றி பேசுவது, பிறப்பை பற்றி பேசுவது, அதெல்லாம் இருக்க, அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.


வழக்கு கொடுக்க வந்தால் வழக்கை எடுக்கிறார்களா? அவசர, அவசரமாக தனிப்படை அமைத்து அவரை கைது செய்து சிறைப்படுத்தும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா? சரி பேசினார், தப்பு தான். அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்கள். அதற்கு பிறகு விட வேண்டியது தானே, அதற்கு ஒரு பெண்ணை அவசர, அவசரமாக வேறு மாநிலத்திற்கு போய் கைது பண்ணி சிறைப்படுத்தும் அளவிற்கு பெரிய குற்றமா? இந்த நாட்டில் மலையை வெட்டி விற்றவன், வித்து கொண்டிருப்பவன், மண்ணை அள்ளி தின்பவன், ஊழல் லஞ்சத்தில் ஊறி திளைப்பவன், பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், அவன் எல்லாம் வெளியில் தானே இருக்கிறான், என கேள்வி எழுப்பினார்.

Advertisement