மணமகள் கழுத்தில் தாலி கட்டப்போன தாய்! திருமண விழாவில் உதயநிதி 'கலகல'
சென்னை; சென்னையில் திருமண விழாவில் மணமகளுக்கு அவரது தாயாரே உணர்ச்சி மயத்தில் தாலியை கட்ட எத்தனித்ததை துணை முதல்வர் உதயநிதி சுட்டிக்காட்டி மேடையை கலகலப்பாக்கினார்.
சென்னையில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணங்களை துணை முதல்வர் உதயநிதி தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பின்னர், மணமக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மொய், 30 வகையான சீர்வரிசை பொருட்கள் அளிக்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியின் போது, மணமக்கள் சூர்யகுமார்- குணவதி ஆகியோர் திருமணத்தை உதயநிதி நடத்தி வைத்தார். மேடையில் மணமக்கள் வீற்றிருக்க, அங்கு இருந்த மணமகள் தாயார் கையில் தாலியை எடுத்தார். பின்னர் சற்றும் யோசிக்காமல் பெண்ணுக்கு கட்ட எத்தனித்தார்.
இதை அருகில் நின்றபடியே கண்ட உதயநிதி ஒரு கணம் திகைத்துப் போனார். உடனடியாக மணமகள் தாயாரை நோக்கி, நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி சிரித்தார். தமது உணர்ச்சிமயமான செயலை ஒரு விநாடி சுதாரித்துக் கொண்ட தாயும் மணமகன் கையில் தர, அவர் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இந்த சம்பவம் மேடையில் மட்டும் அல்ல, அதை கண்டு கொண்டிருந்த பலரிடையேயும் சிரிப்பை வரவழைத்தது.
நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது:
இன்றைய திருமண விழாவில் பல சுவாரஸ்யங்களை காண முடிந்தது. மணமக்களில் காதல் ஜோடிகள் பலர் இருக்கின்றனர்.
திருமணம் நடக்கும் போது மணப்பெண்களில் ஒருவர் கண்கலங்கினார். ஏம்மா அழுகுற என்று நான் கேட்டேன். பக்கத்தில் இருந்த கலாநிதி வீராசாமி, 'அந்தப் பெண் அழுவது இன்று தான் கடைசி நாளாக இருக்கும்' என்றார்.
மாப்பிள்ளைகளில் ஒருவர், 3 முடிச்சுக்கு பதிலாக 5 முடிச்சு போட்டார். 'என்னப்பா கட்டிகிட்டே இருக்கே' என்று கேட்டால், 'ஸ்ட்ராங்கா இருக்கட்டும் அண்ணே' என்று சொல்கிறார்.
மணமக்களுக்கு மாலையை எடுத்துக் கொடுத்தால், பதட்டத்தில், சிலர் தனக்குத் தானே மாலை போட்டுக் கொண்டனர். மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நண்பர்களாக இருந்து இல்லறம் நடத்தி வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.