கஸ்துாரியை நவ.,29 வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு!

33

சென்னை: தெலுங்கர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கடந்த நவ., 3ம் தேதி பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி பேசும்போது, தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


அதன் பின் அவர் 'தெலுங்கு மக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. என் பேச்சை திரும்பப் பெறுகிறேன்' என்று மன்னிப்பு கேட்டார். எனினும், அவர் மீது வெவ்வேறு இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தெலுங்கு அமைப்புகளைச் சேர்ந்தோர் அளித்த புகாரில், சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


அவர் தலைமறைவாகி இருந்தார். முன்ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரி நேற்று கைது செய்யப்பட்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (நவ.,17) ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது, 'அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்' என கோஷம் எழுப்பினார் கஸ்தூரி.

Advertisement