மீண்டும் இன கலவரத்தால் மணிப்பூர் மாநிலம்... எரிகிறது!: முதல்வர் வீடு, அரசு சொத்துக்கள் மீது தாக்குதல்
இம்பால்:இரண்டு சமூகத்தினர் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள கலவரங்களால் மணிப்பூர் மாநிலம் எரிகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளுக்கு தீ வைத்த ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள், முதல்வரின் வீடு, அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், மொத்த மக்கள்தொகையில், 53 சதவீதம் உள்ள மெய்டி சமூகத்தினர் வசிக்கின்றனர்.
அதே நேரத்தில் மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் மலை பிராந்தியங்களில் வசிக்கின்றனர். மற்ற சமூகத்தினர், 7 சதவீதம் உள்ளனர்.
ஒற்றுமை பேரணி
தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என, மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி, கடந்தாண்டு மே மாதத்தில், பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மெய்டி சமூகத்தினர் நடத்தினர்.
அப்போது, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து வன்முறை, கலவரமாக மாறியது. இதில், 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகளால் ஓரளவுக்கு அமைதி திரும்பினாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இரு சமூகத்தினர் இடையே அடிக்கடி மோதல், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில், ஆயுதம் ஏந்திய கூகி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பாதுகாப்புப் படையினருடன் சண்டையில் ஈடுபட்டனர். அதில், போராட்டக்காரர்கள், 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், மூன்று குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வன்முறையைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்த நேரத்தில், கடத்திச் செல்லப்பட்ட ஆறு பேரின் உடல்களும் சமீபத்தில் மீட்கப்பட்டன. இதனால், மெய்டி சமூகத்தினர் ஆத்திரமடைந்தனர்.
இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஏழு மாவட்டங்களில், இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது.
இருப்பினும், இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வன்முறை சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலையில், மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளில் போராட்டக்காரர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டனர். முதல்வர் பைரேன் சிங்கின் வீட்டிலும் தாக்குதல் நடத்தினர்.
வீடுகளுக்கு தீ வைப்பு
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவில் துவங்கி, நேற்று அதிகாலை வரை மீண்டும் வன்முறைகளில் மெய்டி சமூகத்தினர் ஈடுபட்டனர்.
ஒரு மூத்த அமைச்சர் உட்பட, பா.ஜ.,வைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு காங்., - எம்.எல்.ஏ.,வின் வீடுகளில் தாக்குதல் நடத்தினர். ஆத்திரம் அடங்காத அவர்கள், அந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த வீடுகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த வீடுகளில் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் குடும்பத்தார் இல்லாததால், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு இம்பாலின் லுவாங்ஷாங்கம் பகுதியில் உள்ள, முதல்வர் பைரேன் சிங்கின் பூர்வீக வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறினர். வீட்டுக்கு, 600 அடி துாரத்துக்கு முன் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். மேலும், முதல்வரின் வீட்டுக்கு செல்லும் சாலையில், டயர்களை எரித்தனர். வாகனங்கள் செல்வதை தடுக்க இரும்பு கம்பிகளை போட்டனர். இந்தப் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.
நேற்று காலையில், இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகள் பொதுவாக அமைதியாக இருந்தாலும், பதற்றமான சூழ்நிலை நிலவியது. சாலைகளில் எரிக்கப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தன.
இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, முதல்வரின் வீடு, அலுவலகம், கவர்னர் மாளிகை, அமைச்சர்கள் வீடு உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதரவு வாபஸ்
மணிப்பூரில் நடக்கும் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆளும் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சி, அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த கட்சி தலைவர் கன்ராட் சங்மா கூறுகையில், ''வன்முறையை கட்டுப்படுத்துவதில், பைரேன் சிங் தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. தற்போது நடக்கும் சூழலை மனதில் வைத்து, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துஉள்ளோம்,'' என்றார்.
பைரேன் சிங் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதால், தேசிய மக்கள் கட்சி ஆதரவு வாபஸ் பெறப்படுவது, ஆட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மணிப்பூரில் மீண்டும் கலவரம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்து, டில்லிக்கு நேற்று விரைந்தார். மணிப்பூர் நிலவரம் தொடர்பாக, ராணுவம் மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் கொல்லப்பட்ட, கூகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் 10 பேர், சமீபத்தில் உயிரிழந்தனர். இவர்களுடைய உடல்கள், அசாம் மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன; அது முடிந்து, உடல்கள் மீண்டும் ஜிரிபாம் மாவட்டத்துக்கு எடுத்து வரப்பட வேண்டும். அதன்பிறகே, இறுதிச் சடங்குகள் நடக்கும் என, கூறப்படுகிறது.இதில் தாமதம் ஏற்படுவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கூகி சமூகத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.