திருத்தணி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மந்தம்
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்தின் தரம் உயர்த்த கடந்த, 2023ம் ஆண்டு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. பின் கடந்தாண்டு ஆக.6ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திருத்தணி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
ரயில் நிலையத்தில் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம், பயணியர் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு, ஒரு வழியும், வெளியே செல்வதற்கும் ஒரு வழியும் நுழைவு வாயிலில் முருகன் கோவில் கோபுரம் ஏற்படுத்தவும், அனைத்து பேருந்துகளும் ரயில் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
தற்போது,ரயில் நிலையத்தில் இரண்டு நுழைவு வாயில், நடைமேடைகள் உயரம் உயர்த்தும் பணிகள் மற்றும் பயணியர் காத்திருப்பு அறை போன்ற பணிகள் மட்டும் முடிந்துள்ளன. மீதமுள்ள, நுழைவு வாயிலில் முருகன் கோபுரம் மற்றும் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதாவது, நடைமேம்பாலம் அமைப்பதற்கு இரும்பு துாண்கள் நிறுத்தி, நான்கு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை நடைபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. அதே போல் நுழைவு கோபுர பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் ஆமைவேகத்தில் நடப்பதால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே ரயில்வே உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேம்பாட்டு பணிகள் துரிதப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.