ரூ. 90.75 லட்சம் மோசடி பா.ஜ., பிரமுகர் கைது

கடலுார்: விருத்தாசலத்தில், தொழில் துவங்குவதாக கூறி, நண்பரிடம் 90 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த பா.ஜ., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 36; விருத்தாசலத்தை சேர்ந்த பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார். இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் பெட்ரோல் பங்க் துவங்குவதாக கூறி, 2023ம் ஆண்டு, பாஸ்கரிடம் 14 லட்சம் ரூபாயை ராஜ்குமார் கடனாக பெற்றுள்ளார். பின்னர், தொழில் வளர்ச்சிக்காக தேவைப்படுவதாக கூறி, 30 லட்சம் ரூபாய் பெற்றார்.

மேலும், விருத்தாசலத்தில் உள்ள 6.5 சென்ட் இடத்தை வாங்குவதற்கு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வியிடம் 52 லட்சம் ரூபாய் விலை பேசி முன்பணமாக 2 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் ஏற்படுத்தியதாகவும், அந்த இடத்தை வாங்கிக் கொள்ளுமாறும் பாஸ்கரிடம் ராஜ்குமார் கூறினார். அதை நம்பி, பல தவனைகளாக ராஜ்குமார், அவரது மனைவி விஜயாவதி ஆகியோரிடம், இந்தாண்டு ஜன., பிப்ரவரி மாதங்களில் 42 லட்சம் ரூபாயை பாஸ்கர் கொடுத்துள்ளார்.

அதே போன்று, பாஸ்கரின் தந்தையிடமும் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தனர். ஆனால், வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை, இடத்தை கிரயம் செய்து தராமல் கணவன், மனைவி இருவரும் மோசடி செய்தனர். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு ராஜ்குமார், அவரது மனைவி விஜயாவதி, தாய் சுலோக்சனா ஆகியோர், பாஸ்கருக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், 90 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக, கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 10ம் தேதி வழக்குப் பதிந்தனர்.

ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். விஜயாவதி, சுலோச்சனாவை தேடி வருகின்றனர்.

Advertisement