ரோட்டில் கிடந்த மாட்டின் தலை புகாரின்றி போலீசார் கைவிரிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெருமாள்மடை ரோட்டில் துண்டிக்கப்பட்ட மாட்டின் தலை வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், யாரும் புகார் அளிக்காததால் நடவடிக்கை இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து செக்கடி தெரு வழியாக பெருமாள்மடை செல்லும் ரோட்டில், நேற்று முன்தினம் மாட்டு கன்றின் தலை துண்டிக்கப்பட்டு ரோட்டில் வைக்கப்பட்டிருந்தது.
ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், மாட்டின் தலை வைக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக யாரும் புகார் அளிக்க முன்வராததால், மாட்டின் தலையை துண்டித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் ஹசன் கூறுகையில், இறைச்சிகடையில் வெட்டப்பட்ட, மாட்டின் தலை, கழிவுகளை, பேரூராட்சி குப்பை வண்டியில் கொண்டு சென்றனர்.
அப்போது மாட்டின் தலை ரோட்டில் விழுந்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. யாரும் புகார் அளிக்காத நிலையில் இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. பேரூராட்சி குப்பையை கொண்டு சென்றவர்கள் குறித்து விசாரிக்கிறோம் என்றார்.