பம்பையில் முன்பதிவு செய்யப்படும் பஸ் டிக்கெட் 24 மணி நேரம் செல்லும் -கேரள போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சபரிமலை: 'பம்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பஸ் டிக்கெட்டுகள், 24 மணி நேரம் வரை செல்லும்' என, கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தனி வாகனங்களில் வருவது மட்டுமின்றி அரசு பஸ்களிலும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதற்காக கேரளாவில் பல்வேறு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் தங்கள் ஊருக்கு திரும்புவதற்காக கோவிலுக்கு செல்லும் போது, பம்பையில் இருந்து பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

ஆனால், கோவிலில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் போது, திரும்பி வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

பம்பையில் குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள், அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து, கேரள அரசு போக்குவரத்து கழகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

பம்பையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த அதே வழியில் 24 மணி நேரம் வரை செல்லுபடியாகும். சபரிமலையில் நெரிசல் காரணமாக பக்தர்கள் தரிசனம் முடிந்து பம்பை திரும்பும் போது, நிர்ணயிக்கப்பட்ட முன்பதிவு நேரத்தை கடந்தால், அதே வழியில் மற்றொரு பேருந்து பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இதற்காக பக்தர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என, கேரள அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement