திருத்தணி, திருவாலங்காடு பகுதியில் பராமரின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா

திருத்தணி:திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில், மொத்தம், 69 ஊராட்சிகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளில் சிறுவர் பூங்கா ஏற்படுத்தியது. இந்த பூங்காவில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு சறுக்கு மேடை, ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் கருவிகள் என பல்வேறு வசதிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியது.

ஆரம்ப காலத்தில் அதிகளவில், குழந்தைகள், மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பு இல்லாததால், பல ஊராட்சிகளில் விளையாட்டு கருவிகள் துரும்பு பிடித்து வீணாகும் நிலையில் உள்ளன.

சில இடங்களில் சிறுவர் பூங்கா முழுதும் முட்செடிகள் வளர்ந்தும் பூங்கா இருக்கும் அடையாளம் தெரியாத அளவில் உள்ளன. ஆனால், ஊராட்சி நிர்வாகம் பூங்காவிற்கு பராமரிப்பு செலவு என குறிப்பிட்ட தொகை எடுக்கப்படுகிறது. பூங்காவை பராமரிக்காமல் இருப்பதால் அரசு பணம் வீணாவதுடன், குழந்தைகள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளிலும் சிறுவர் பூங்காக்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

Advertisement