சாலையில் மாடுகள் உலா; விபத்து ஏற்படும் அபாயம்
மந்தாரக்குப்பம் ; மந்தாரக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி மேம்படுத்தப்பட்ட சாலை மந்தாரக்குப்பம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் கூட்டம் கூட்டமாக மாடுகள் அமர்ந்துள்ளதாலும், சுற்றித் திரிவதாலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
சாலையில் மத்தியில் அமர்ந்து இருக்கும் மாடுகள் தீடிரென்று ஓடுவதாலும், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு வேகமாக பாய்வதாலும் சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கட்டுப்படுத்த முடியமால் கீழே விழுகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்படுகிறது. சாலையில் மாடுகள் சண்டை போட்டு கொள்ளும் போது கடைவீதிகளில் நிற்கும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதமடைகின்றன.
எனவே இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனனர்.