மாநகராட்சி துணையுடன் மதம் மாற்ற முயற்சி; ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:


'யேசுவின் சமாதானம்' என்ற பெயரில் திருப்பூர் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சி, 16ம் தேதி தெற்கு ரோட்டரி கிளப் அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சி மதம் மாற்றும் நோக்குடன் நடந்துள்ளது.


கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் நோக்குடன், அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகள், துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிர்ச்சியடைந்த துாய்மை பணியாளர் கேள்வி எழுப்பியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம், இந்நிகழ்ச்சியை எப்படி அனுமதித்தது என்று விளக்க வேண்டும்.




கடந்த வாரம் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில், பெஞ்சமின் என்பவர் தலைமையில் சிலர், மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, போலீசிடம் சிக்கியுள்ளனர். பின், மன்னிப்பு கேட்டுள்ளனர். இவர்கள் தான் திருப்பூரில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

மேயர் தினேஷ்குமார், 57வது வார்டு கவுன்சிலர் கவிதா உட்பட, தி.மு.க., பிரமுகர்கள் பங்கேற்றுள்ளதால், அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தி.மு.க.,வினர், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு, சமபந்தி விருந்து நடத்துவதில்லை. ஆனால், கிறிஸ்துவ மதத்தை பரப்புவது போல சம்பந்தமே இல்லாமல், சமபந்தி விருந்து நடத்தியது ஏன்?

தன்னார்வ அமைப்புகளை இவ்வாறு அனுமதித்தால், அரசு அலுவலகங்கள் ஜெபக்கூடங்களாக மாறிவிடும். மதம் மாற்றும் நோக்குடன், சமபந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியவர்கள் மற்றும் கிறிஸ்துவ மதமாற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



உண்மை இல்லை!

சமூகநல அமைப்பினர், அனைத்து மாநகராட்சி பகுதியிலும், 'சமபந்தி விருந்து' நடத்தி வருவதாகவும், திருப்பூர் துாய்மை பணியாளர் சேவையை பாராட்டி, விருந்து அளிப்பதாகவும் அனுமதி கேட்டனர். துாய்மைப் பணியாளர்களின் சேவைப் பாராட்டித்தானே நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கின்றனர் என்ற பொதுப் பார்வையில், நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினோம். இந்நிகழ்ச்சியின் இறுதியில் நானும் கலந்து கொண்டேன்.ஆனால், நிகழ்ச்சிக்கு இப்போது மதச் சாயம் பூசி, உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. இருந்தாலும், என்ன நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்தேன்.இதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளில், மதமாற்றம் எதுவும் வலியுறுத்தப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு தங்கள் விசிட்டிங் கார்டை மட்டும் வழங்கியுள்ளனர்.இதை வைத்துத்தான், மத மாற்ற முயற்சி நடப்பதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டுகிறது. அதில் உண்மையில்லை.-- தினேஷ்குமார்திருப்பூர் மேயர்

Advertisement