குஜராத்தில் இறந்ததாக கருதி எரிக்கப்பட்டவர் இரங்கல் கூட்டத்திற்கு வந்ததால் அதிர்ச்சி

மெஹ்சானா: குஜராத்தில் இறந்ததாக கருதி தகனம் செய்யப்பட்டவர், இரங்கல் கூட்டத்தின் போது நேரில் வந்ததால் பெற்றோர், உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.


குஜராத்தின் மெஹ்சானா நகரத்தைச் சேர்ந்தவர் ப்ரிஜேஷ் சுத்தார், 43. கடந்த அக்., 27ல் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு பிரச்னை



உடல் ரீதியான பிரச்னைகள், தொழில் முதலீட்டில் இழப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கிய அவர், மன அழுத்தம் காரணமாக மாயமானதாக கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் ப்ரிஜேஷை தேடிய உறவினர்கள், அவர் கிடைக்காததை அடுத்து போலீசில் புகாரளித்தனர்.

போலீசாரும், அவரைத் தேடி வந்த சூழலில், கடந்த 10ம் தேதி சபர்மதி பாலம் அருகே இறந்து கிடந்த உடலை கைப்பற்றி, அதை அடையாளம் காண ப்ரிஜேஷின் உறவினர்களை அழைத்தனர்.

அழுகிய நிலையில் ப்ரிஜேஷை போன்றே இருந்த உடலைப் பார்த்த உறவினர்கள், அது அவர் தான் எனக் கூறி வாங்கிச் சென்று தகனம் செய்தனர்.

இதையடுத்து, அவரின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம், ப்ரிஜேஷின் இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, திடீரென ப்ரிஜேஷ் நேரில் வந்தார். இதனால், அவரது பெற்றோர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் நேரில் வந்ததை கண்டு, உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

மகிழ்ச்சி



பின்னர், வீட்டிற்குள் அழைத்துச் சென்று மாயமானது குறித்து விசாரித்தனர். அப்போதுதான், தவறுதலாக வேறொருவரின் உடலை தகனம் செய்தது ப்ரிஜேஷின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இறந்ததாக கருதப்படுபவர் திரும்பி வந்ததால் அவரின் குடும்பம் மகிழ்ச்சி அடைந்தாலும், எரிக்கப்பட்டது யாருடைய உடல் என்ற கேள்விக்கு பதில் தெரியாததால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

Advertisement