யாரப்பா அந்த ஐடியா மணி; குபீர் யோசனையால் குவிந்தது கூட்டம்!

52

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பொதுக்கூட்டத்திற்கு வருபவருக்கு தலா ஒரு சேர் இலவசம் என அறிவித்த அ.தி.மு.க., திட்டம் அபாரமாக வேலை செய்தது. கூட்டம் முடியும் வரை காத்திருந்த மக்கள், அவரவர் உட்கார்ந்து இருந்த சேரை தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டனர்.


பொதுவாக, அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு காசு கொடுத்தும், பரிசு பொருட்களை கொடுத்தும், மது வாங்கி கொடுத்தும் ஆட்களை சேர்ப்பது வழக்கம். இந்த பார்முலாவை தான் காலம் காலமாக அரசியல் கட்சிகள் பாலோ செய்து வருகின்றன.


அந்த வகையில், திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்காக, அ.தி.மு.க., கையில் எடுத்த புது யுக்தி தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.


ஆமாம், கூட்டத்திற்கு வருபவர்கள் அமருவதற்காக போடப்பட்ட சேர்களை, கூட்டம் முடிந்த பிறகு, அவரவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 1,500 சேர்கள் போடப்பட்டுள்ளது. சேர் இலவசமாக கிடைக்கிறது என்ற தகவல் பரவியதும், பெரும் கூட்டம் கூடியது.

வீட்டிலிருந்த பெண்கள், சிறுவர் சிறுமியர் பலரும் வந்து சேர்களை பிடித்து உட்கார்ந்து இருந்தனர். அவரவர் சேரை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், அ.தி.மு.க., தலைவர்களின் அறுவை பேச்சையும் கேட்டு அமைதியாக சேரில் அமர்ந்திருந்துள்ளனர்.


பேச்சை முடித்து மைக்கை ஆப் செய்வதற்குள், மக்கள் தாங்கள் அமர்ந்திருந்த சேரை எடுத்து, தலையில் கவிழ்த்து போட்டு விட்டு, வீட்டை நோக்கி நடையை கட்டினர்.


இது தொடர்பான வீடியோ சமுகவலைதளங்களில் வைரலான நிலையில், அ.தி.மு.க.,வினரின் அபார யோசனை அரசியல் கட்சியினரை அசர வைத்துள்ளது.யாரப்பா அந்த ஐடியா மணி என்று, அரசியல் கட்சியினர் இணையத்தில் கேலியும் கிண்டலுமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


இனிவரும் காலங்களில் இதே நடைமுறையை எல்லா அரசியல் கட்சியினரும் பின்பற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்படும் என்றும் இணையத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

Advertisement