மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துங்க; மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

19

சென்னை: 'மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நடந்த தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக, நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முக்கியமான திட்டங்களை தீட்டி அதனை நிறைவேற்றுவது மாநில அரசின் கையில் தான் உள்ளது. வரி பகிர்வு முறையாக வழங்காத காரணத்தினால், மாநிலங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் மூலம், மாநிலங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

வரி பகிர்வு வீழ்ச்சி



போதிய அளவு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் தமிழகத்தின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வரி பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். மத்திய அரசு குறைந்த அளவு நிதி வழங்குகிறது. 41 சதவீதம் நிதி பகிர்வு வழங்க வேண்டும் என முடிவு செய்தாலும், 33.16% மட்டுமே வழங்கப்பட்டது. தமிழகத்திற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

50 சதவீதம்



நிதி குழு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தற்போதைய வரி பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பது போல் உள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கு சமச்சீரான வரி பகிர்வு அளிக்க வேண்டும். வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத வகையில், புதிய அணுகுமுறை தேவை. இயற்கை பேரிடர்களால் மாநில கட்டமைப்பு வசதிகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன.

நிதி ஒதுக்கவில்லை



வரி பகிர்வு மாநில அரசின் செயல்பாட்டை தொய்வடைய செய்கிறது. கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரி பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை. இயற்கை பேரிடரை சந்திக்கும் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இயற்கை பேரிடரால் ஏற்படும் இழப்புகளை சீரமைக்க உரிய நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement