செயற்கை நுண்ணறிவு கற்பது அவசியம்; விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யின் எக்ஸ்.டி.ஐ.சி., மையம் சார்பில், திரைத்துறையில் புதுமைகளை அறிமுகம் செய்ததற்காக விருது வழங்கப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி.,யின், தொழில் நுட்ப புதுமை மையம் என்ற, எக்ஸ்.டி.ஐ.சி., மையம் சார்பில், இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்றனர்; நிறைவு விழா நேற்று நடந்தது.
இதில், திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எக்ஸ். டி.ஐ.சி., விருதை, அக்குலஸ் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் ஸ்டீவன் லாவல்லே, அன்னா லாவல்லே ஆகியோர் வழங்கினர்.
விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:
'லே மஸ்க்' என்ற, 37 நிமிட மெய்நிகர் காட்சிப்படமான, 'திரில்லர்' படத்தை, ஆறு ஆண்டுகளாக பல நாடுகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கினோம். இதற்கான கதைக்களம், இசை, இயக்கம் உள்ளிட்ட பணிகளை நான் செய்தேன். இதை, உலக திரைப்படமாக உருவாக்கி உள்ளோம். இதை பார்த்த எல்லாரும், 10 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது போல இருப்பதாகக் கூறினர்.
இதுபோன்ற புதிய தொழில் நுட்ப படைப்புகள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வெளிவர வேண்டும். அதில், நம் கலை, கலாசாரம் உள்ளிட்டவை பதிவாக வேண்டும். நான் வெளிநாடுகளில் உள்ள, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் போது, அங்கு இந்திய இளைஞர்களை சந்திக்க முடிகிறது.
ஆனாலும், இதற்காக இந்தியர்களாக நாம் பெருமைப்பட முடியவில்லை. அதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நுட்ப அறிவு சார்ந்த நம் இளைஞர்களால் இங்கேயே உருவாக்கப்பட வேண்டும். அதிலிருந்து இந்திய படைப்புகளாக, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என, நான் விரும்புவது உண்டு.
படைப்பாற்றலுக்கு எத்தகைய கோட்பாடுகளும் கிடையாது. அவரவர் சிந்தனை சார்ந்தே படைப்புகள் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு, படைப்பாளிகளின் வாய்ப்புகளை ஒழித்து விடும் என, அஞ்சப்படுகிறது. ஆனால், உண்மையான படைப்பாளி பலரை நேரில் வசப்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவால் அது முடியாது. அதனால், அச்சப்படத் தேவையில்லை.
அதேநேரம், நம் பணிகளை எளிதாக்கவும், அடுத்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும், உலகளாவிய போட்டிகளை சமாளிக்கவும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் நுட்பங்களை கற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சென்னை, ஐ.ஐ.டி.,யின் எக்ஸ்.டி.ஐ.சி., துறையின் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட பேராசியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.