கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை; கணித்து சொன்னார் திருமா!

16

புதுக்கோட்டை: '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.



புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவரங்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம். இதனால் கட்சி வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சொல்கிறது என்றால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டணி ஆட்சி




எங்கள் கட்சி தி.மு.க.,கூட்டணியில் இருந்து வெளியேறாது. ஆனால் வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை. அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியில் விவாதித்தார்களா? என்ற தகவல் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது.



முக்கிய பங்கு




விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு வருகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதிலும், இண்டியா கூட்டணியை உருவாக்கியதிலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பங்கு உண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவது விடுதலை சிறுத்தைகளின் நோக்கமும், கடமைகளுள் ஒன்று. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement