இது, சில கோடீஸ்வரர்களுடன் நடக்கும் போர்: ராகுல்
மும்பை: ''மஹா., சட்டசபை தேர்தல் சித்தாந்தங்களுக்கும், சில கோடீஸ்வரர்களுக்கும் இடையே நடக்கும் போர்,'' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.
மஹா.,வில் நவ.,20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பல்வேறு திட்டங்கள் ஒரு நபருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் வகுக்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் டெண்டர்கள் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மஹா., சட்டசபை தேர்தல் சித்தாந்தங்களுக்கும், சில கோடீஸ்வரர்களுக்கும் இடையே நடக்கும் போர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் பயிரிடும் வேளாண் பொருட்களுக்கு நியாமான விலை கிடைப்பது உறுதி செய்யப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எல்லாவற்றிற்கும் முன் முக்கிய பிரச்னை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதை, நிறைவேற்றும். மும்பையின் நிலம் அங்கு வாழும் மக்களுக்கு சொந்தமானது. அதனை அபகரித்து ஒருவருக்கு உதவுவதற்காக பறிக்கப்படுகிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.