விமான போக்குவரத்தில் புதிய சாதனை; ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் பயணம்!

3

புதுடில்லி: வரலாற்றில் முதல் முறையாக, நேற்று (நவ.,17) ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர் என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.



குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும், விமானத்தில் பயணம் செய்வதற்கு தான் விரும்புவார்கள். டிக்கெட் விலை எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையேனும் வானில் விமானத்தில் பறந்து விட வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு உண்டு. இதனால் விமானப்பயணத்தை விரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணத்தை தவிர்த்து, விமான பயணத்தை விரும்பி வருவோரும் அதிகரித்து விட்டனர்.


இதனால், உள்நாடு, வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்த புதிய சாதனை நேற்று எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தமது இணையத்தில் வெளியிட்டு உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:




* வரலாற்றில் முதல் முறையாக, நேற்று (நவ.,17) ஒரே நாளில் 5 லட்சம் உள்நாட்டு பயணிகள் பயணம் செய்துள்ளனர்.


* நவம்பர் 8ம் தேதி 4.9 லட்சம் பேரும், நவம்பர் 9ம் தேதி 4.96 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.


* நவம்பர் 14ம் தேதி 4.97லட்சம் பேரும், நவம்பர் 15ம் தேதி 4.99 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.


* நவம்பர் 16ம் தேதி 4.98 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்த மாதம் சராசரியாக ஒரு நாளைக்கு 3,161 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இது முந்தைய மாதத்தை விட ஒரு நாளைக்கு 8 விமானங்கள் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதையும், மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்து வருவதையும் இது காட்டுவதாக உள்ளது. வரும் காலத்தில் விமான பயணத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement