இன்னும் நடக்கும் குழந்தை திருமணங்கள்; ஒராண்டில் மட்டும் 3 ஆயிரம் புகார்கள்!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 3 ஆயிரம் குழந்தை திருமண புகார்கள் வந்துள்ளன. அதன்படி, 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு, நிகழ்ந்த குழந்தை திருமணங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கிடைத்த தகவல்கள் பின்வருமாறு: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 3 ஆயிரம் குழந்தை திருமண புகார்கள் வந்துள்ளன. அதன்படி, 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 1,054 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 808 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக புகார்கள் வந்த முதல் 5 மாவட்டங்கள்!
* நாமக்கல்- 171 புகார்கள்
* கடலூர்- 150 புகார்கள்
* சேலம்- 143 புகார்கள்
* திண்டுக்கல்- 175 புகார்கள்
* தேனி- 161 புகார்கள்
குழந்தை திருமணங்கள் நடந்த முதல் 5 மாவட்டங்கள்!
* நாமக்கல்- 117 திருமணங்கள்
* ஈரோடு- 62 திருமணங்கள்
* கடலூர்- 56 திருமணங்கள்
* திண்டுக்கல்- 54 திருமணங்கள்
* கோவை- 46 திருமணங்கள்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழந்தை திருமணம் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தை திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் பகுதியில் அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண் உடல், 21 வயதில் தான் முழுமையாக வளர்ச்சியடைகிறது.
ஆரம்பகால கர்ப்பம், குறிப்பாக 21 வயதுக்கு முன் கர்ப்பம் தரித்தால், தாய் மற்றும் குழந்தைக்கு உடல்நல சிக்கல்கள் அதிக ஆபத்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.