ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராத காரணம் இதுதான்; சொல்கிறார் சீமான்

10


திருச்சி: 'பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டில் மட்டும் ரெய்டு நடத்தாதது ஏன்' என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.


திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவில் பா.ஜ., ஆளாத மாநிலங்களான ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், டில்லியில் கெஜ்ரிவால், தெலங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் வீடுகளில் எல்லாம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் வீட்டுக்கு ரெய்டு வரவில்லை. அப்படியென்றால், கறைபடியாத, தூய்மையான கையா இது?


உங்களுக்குள்ள ஒரு உடன்பாடு இருக்கு. சரியாக கப்பம் கட்டி வருவதால், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு எல்லாம் ரெய்டு வராது. இது மறைமுக உறவு கிடையாது. நல்ல உறவு, வெளிப்படையான கூட்டணி.


பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களையோ, அமைச்சர்களையோ பிரதமர் எளிதாக சந்திக்கிறாரா?. ஆனால், ஒரே நாளில் காலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். மாலையில் அமைச்சர் உதயநிதியை சந்திக்கிறார். ஏதோ, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த சம்மந்தி போல சந்திக்கிறார். இது மறைமுகமா? நேரடியா?


அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கும் போதே, அக்கட்சியின் நிகழ்ச்சிக்கு அழைத்தும் பா.ஜ., வரவில்லை. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இல்லாத போது, கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், அதனை வெளியிடுகிறார். இதன்மூலம், பா.ஜ.,வுடன் யாரு நெருக்கமான கூட்டணியை வைத்துள்ளார் என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.,


அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்க எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நீங்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு தான் இருக்கிறது,' என சீமான் பதிலளித்தார்.

Advertisement