ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசு, சென்னை கமிஷனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

1

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர்.


அதில் ரவுடி திருவேங்கடம் போலீசில் இருந்து தப்பி ஓட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா சமீபத்தில் கைது செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார், 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நாகேந்திரன் மற்றும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் ஆகியோரை தவிர , எஞ்சிய 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து, அவரது தாயார் விசாலாட்சி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது குறித்த உத்தரவு மற்றும் ஆவணங்களை உரிய நேரத்தில் அஸ்வத்தாமனிடம் வழங்கவில்லை என்றும், தேசிய கட்சியின் நிர்வாகியான தனது மகனின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இந்த குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழக அரசு மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement