10 மாதங்களில் 20,200 மரங்கள் வெட்டி கடத்தல் அட்டூழியம்! வேடிக்கை பார்க்கும் வனம், நீர்வள துறையினர்

காஞ்சிபுரம் : வருவாய் தரும் பனை மற்றும் ஈச்ச மரங்களை, ஏரிக்கரையோரத்தில் இருந்து வேருடன் வெட்டி, பிற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு 10 மாதங்களில் மட்டும், 20,200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்காணித்து தடுக்க வேண்டிய நீர்வளம் மற்றும் வனத்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக பசுமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் வன கட்டுப்பாடு மாவட்டத்தில், மலை, காடுகள் குறைவாக உள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36.8 சதுர கி.மீ., மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 சதுர கி.மீ., மட்டுமே வனப்பகுதியாக உள்ளன.

வனப்பரப்பின் கணக்கீடுபடி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.1 சதவீதம்; செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.5 சதவீதம் என, மொத்தம் 7.6 சதவீதம் மட்டுமே வனப்பகுதி உள்ளது.

மரக்கன்றுகள்



தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இருப்பதால், நகரமயமாதல், கல்லுாரிகள், தொழிற்சாலைகளின் வருகை காரணமாக வனப்பகுதியை உருவாக்க முடியாத சூழல் உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வனப்பரப்பை அதிகரிக்க, வனத்துறையினர் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, மானிய விலைக்கு அரசு மற்றும் தனியார் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறத்தில் தோட்டம் மற்றும் தனியார் தொழிற்சாலைகளை அழகுபடுத்துவதற்கு பனை, ஈச்ச மரங்கள் வேருடன் அகற்றப்படுவது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 5,000க்கும் குறைவான மரங்களே வெட்டப்பட்டு வந்தன. இவற்றை சில வியாபாரிகள் லாபகரமான தொழிலாக மாற்றுவதால், மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் எண்ணிக்கை 20,000க்கும் மேற்பட்ட மரங்களாக அதிகரித்து உள்ளன.

இவற்றை தடுக்க வேண்டிய நீர்வளம் மற்றும் வனத்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, வனத்துறையில் செயல்படுத்தப்படும் மரம் உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருவதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தாலும், மற்றொரு புறம் தனியார் நிலங்களில் இருக்கும் மரங்களை வெட்டி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

குற்றச்சாட்டு



இதற்கு, வனத்துறையினர் கடிவாளம் போடவில்லை எனில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பசுமை பரப்பு மேலும் சரியும் என, பசுமை ஆர்வலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:

பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு இரையாகி வருகின்றன. எஞ்சி இருக்கும் ஈச்ச மரங்களும், பிற மாநிலங்களில் இருக்கும் பூங்கா மற்றும் தொழிற்சாலைகளை அலங்கரிக்க வேருடன் அகற்றப்பட்டு எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது.

இதை தடுக்க வேண்டிய நீர்வளம் மற்றும் வனத்துறையினர், எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாகன சோதனையின் போது, பனை மற்றும் ஈச்ச மரங்களை வெட்டி எடுத்துச் செல்வோரை கையும் களவுமாக பிடித்து, எச்சரித்து அனுப்பி விடுகிறோம்.

இருப்பினும், அதே வேலையாக ஈடுபட்டு வருவோர் சிலர், இரவோடு இரவாக மரங்களை வெட்டி கடத்திச் சென்று விடுகின்றனர்.

இது போன்ற நேரங்களில், காவல் துறை போல கண்காணிக்கும் பணிக்கு எங்களிடம் ஊழியர்கள் இல்லை. சரக ஆய்வாளர்களே இருப்பதால், எங்களால் மரங்களை வெட்டி எடுத்துச் செல்வோரை கண்காணித்து தடுக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



ஆண்டு வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை

2020 4,8002021 8,1802022 11,3002023 15,4002024 20,200



ஆண்டு வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை

2020 4,8002021 8,1802022 11,3002023 15,4002024 20,200

Advertisement