வாகன நெரிசல் அதிகரிப்பால் 100 பஸ் நிறுத்தங்கள் மாற்றம்; பயணியரின் அல்லாடலுக்கு தீர்வு காணவும் முயற்சி

சென்னை : மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் என, கண்டபடி சாலைகள் தோண்டப்படுவதால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் திண்டாடி வருகின்றனர்.

எங்கு பேருந்து நிற்கும் என்று தெரியாமல் அல்லாடும் பயணியருக்கு தீர்வு காணும் வகையில், தேவைக்கேற்ப, 100 பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற, தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு நடந்து வருகிறது.

32 லட்சம் பேர் பயணம்



சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும், 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் -- சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லுார், பூந்தமல்லி- பைபாஸ் - கலங்கரை விளக்கம் என, மூன்று வழித்தடங்களில், 119 கி.மீ., துாரத்துக்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து, கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, சாலைகளை தோண்டும் பணிகள் நடக்கின்றன.

இதற்காக, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் பெரும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில், பாதி முடிந்த நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால், 'பள்ளத்திற்குள் விழுந்துவிடாதீர்கள்' என, எச்சரிக்காத குறையாக, பல இடங்களில், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகள் வாயிலாக, பச்சை வண்ண துணிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலையின் அளவு குறைந்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணி வகுத்து நிற்கின்றன. பல பகுதிகளில் மாநகர பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

குளறுபடி



குறிப்பாக, பூந்தமல்லியில் இருந்து போரூர், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், கிண்டி வழியாக செல்லும் நெடுஞ்சாலையிலும், போரூர் சந்திப்பில் இருந்து வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி வழியாக கோடம்பாக்கம் வரும் ஆற்காடு சாலை போன்றவற்றில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

சென்னை ஒயிட்ஸ் சாலை, சத்யம் தியேட்டர் பேருந்து நிறுத்த பகுதிகளிலும், போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இந்த குளறுபடியால், பேருந்து ஒட்டுனர்கள் பல நேரங்களில், குறுகிய சாலைகளை தவிர்த்து, சில நிறுத்தங்களை விட்டுவிட்டு, வேறு வழியில் பறந்து விடுகின்றனர்.

இதுகுறித்த புகார்கள் தொடரும் நிலையில், பயணியர் அல்லாடலுக்கு தீர்வு காண, சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல் துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் எல்லாம் ஒன்றிணைந்து, புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, நெரிசல் மிக்க சாலைகள், குறுகிய பகுதிகள், பாலங்கள், மெட்ரோ ரயில் நிலையம் பணி நடக்கும் இடங்கள் அருகில் இல்லாமல், 50 - 100 மீட்டர் துாரம் தள்ளி பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.

பேருந்து நிறுத்த வசதியுள்ள இடங்கள், பேருந்து நிறுத்தம் அவசியம் தேவைப்படும் பகுதிகள் எவை என்ற கணக்கெடுப்பில், தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில், 4,400க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான நிறுத்தங்களை, சென்னை மாநகராட்சி பாராமரித்து வருகிறது.

தற்போது, சென்னை புறநகரில் பெரிய அளவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சேதமடைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கணக்கீடு செய்தோம். அதன்படி, 200 நிறுத்தங்களின் பட்டியலை, மாநகராட்சியிடம் அளித்துள்ளோம்.

அதன்படி, தற்போது பல்வேறு நிறுத்தங்களில் பணிகள் நடந்து வருகின்றன. தேவைக்கேற்ப நிறுத்தங்களை இடம்மாற்ற ஆய்வு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, 100 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்ற ஆய்வு நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புகளுடன் ஆலோசித்து, விரைவில் மாற்றம் செய்யப்படும்' என்றனர்.

Advertisement