விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சிக்கு தடை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், காலை 5:30 - 9:30; மாலை 5:00 - 8:00 மணி வரை என, தினமும் 300க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு உகந்த நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.


இந்நிலையில், மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு பயிற்சி பெறும் மாணவியருக்கான விடுதி, ஆறு மாதங்கள் முன் துவக்கியதால், நடைபயிற்சி மேற்கொள்ள நேரம் குறைக்கப்பட்டு, காலை 5:00 - 6:30 மணிக்கும், மாலை 6:30 - 8:00 வரை அனுமதிக்கப்பட்டனர்.

வீராங்கணையர் விடுதி, இந்த வளாகத்தில் செயல்படுவதால், நடைபயிற்சி செல்ல குறைவான நேரமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தன.



இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள முற்றிலும் தடைவிதித்து விளையாட்டு துறை அதிகாரிகள் பேனர் வைத்ததால், நடைபயிற்சிக்கு வருவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திற்குள், நடைபயிற்சி மேற்கொள்ள நேரத்தை ஒதுக்கி தர வேண்டும் என, நடைபயிற்சி மேற்கொள்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது, 'சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவியர் விளையாட்டு மைதான விடுதியில் தங்கி பயிற்சி எடுக்கின்றனர். மாணவியரின் பாதுகாப்பு கருதி நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்றார்.

Advertisement