புகையான் தாக்குதலால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க தீர்மானம்
கிருஷ்ணகிரி, நவ. 19-
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி பஞ்., கீழ்ப்பூங்குருத்தி கிராமத்தில், நேற்று தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க, மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜீ தலைமை வகித்தார்.
மாநில துணை அமைப்பாளர் கோணப்பன் கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், மாநில பொருளாளர் சதாசிவன், மாநில துணை தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், 70 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும், கீழ்பூங்குருத்தி கிராம மக்களுக்கு போர்க்கால அடிப்படையில், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். எண்ணெகொள்புதுார் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
விவசாயிகளின் தேசிய வங்கிக்கடன், கூட்டுறவு வேளாண் சங்கத்தின் பயிர் கடன், தங்க நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதான விவசாயிகளுக்கும், விதவை பெண்களுக்கும், மகன், மகள், வீடு, நிலம் இருந்தாலும், நிபந்தனையின்றி அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
புகையான் தாக்குதலால், 40 சதவீதம் நெல் மகசூல் பாதித்துள்ளது. வேளாண் துறை, வருவாய்த்துறை ஆய்வு செய்து, ஏக்கர் ஒன்றுக்கு, 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.