'மருதமலை கோவிலில் மாற்று மதத்தினரை பணியிலிருந்து நீக்காவிட்டால் போராட்டம்': காடேஸ்வரா சுப்பிரமணியம்
வடவள்ளி: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அளித்த பேட்டி:
கடந்தாண்டு, 'சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம்' என சிலர் கூறியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.
அதேபோல இந்த ஆண்டும், திருப்பூர், கொங்கணங்கிரியில் வேல் வழிபாடு துவங்கி, திருப்பூர், அழகு மலையில் நிறைவடையும். டிசம்பர் 25ம் தேதி, திருப்பூரில் நடக்கும் வேல் வழிபாட்டில், ஹிந்துக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதன் முன்னோட்டமாக, மருதமலையில் வேல் வழிபாடு நடந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாற்று மதத்தினரை பணியில் அமர்த்தியுள்ளனர். அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அர்ஜுன் சம்பத், அவருடைய மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் நடிகை கஸ்துாரி ஆகியோரை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்துள்ளனர்; அது கண்டிக்கத்தக்கது. ஈஷா இயக்கம் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து வருகிறது. அங்கு யாரேனும் அத்துமீறி நுழைந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., அரசு, தி.க., மற்றும் நக்சலைட் சார்ந்த அரசாக உள்ளது.
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஹிந்துக்கள் இணைந்து போராட வேண்டும். வரும் 2026 சட்டசபை தேர்தலில், அரசின் நடவடிக்கைகளுக்காக மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.