பாலக்காடு இடைத்தேர்தல் ஓய்ந்தது பிரசாரம்

பாலக்காடு: பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது, நாளை, 20ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

கேரள மாநிலம், பாலக்காடு காங்., எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், லோக்சபா தேர்தலில் எம்.பி.,யானார். இதையடுத்து, நாளை (20ம் தேதி) பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம், மா.கம்யூ. கட்சி ஆதரவில் சுயேட்சை வேட்பாளராக சரின், பா.ஜ., வேட்பாளராக கட்சியின் மாநில செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட, 10 பேர் போட்டிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங். அணியின் வாகன பிரசாரம் நேற்று மதியம், 2:00 மணிக்கு ஒலவக்கோடு பகுதியில் மேளதாளங்களுடன் துவங்கியது. பேழும்கரை, மெர்சி கல்லூரி, திருநெல்லாயி, அரசு பஸ் ஸ்டாண்ட், ஐ.எம்.ஏ., சந்திப்பு நிரஞ்சன் சாலை வழியாக ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தடைந்தது.

மா.கம்யூ., கட்சியின் வாகன பிரசாரம், உள்விளையாட்டு அரங்கம் விக்டோரியா கல்லூரி, மோயன் மாடல் பள்ளி, தலைமை தபால் அலுவலகம், சுல்தான்பேட்டை வழியாக ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தடைந்தது.

பா.ஜ., பிரசார வாகன பேரணி நேற்று மதியம் 2:00 மணிக்கு மேலாமுறியில் துவங்கி, வடக்கந்தரை, சுண்ணாம்புத்தறை, ஜைனிமேடு, ஒலவக்கோடு, கல்பாத்தி, வலியபாடம், புத்தூர், ராமநாதபுரம், மணலி வழியாக ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்தது.

மூன்று அணிகளின் பிரசாரம், ஆடல் பாடலுடன் ஒரே இடத்தில் சங்கமித்தது.

அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை, 6:00 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது.

Advertisement