மங்களூரு விரைவு ரயிலில் ரூ.63 லட்சம் நகை திருட்டு
உடுப்பி: மும்பையிலிருந்து மங்களூரு வந்த ரயிலில் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போயின.
மும்பையைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் தனது குடும்பத்தினருடன், இம்மாதம் 15ம் தேதி, மும்பையிலிருந்து சி.எஸ்.எம்.டி., மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இவர், நான்கு சூட்கேஸ்களை, தன் இருக்கையின் கீழ் வைத்திருந்தார். இந்த சூட்கேஸ்களில் உடைகள், நகைகள் வைத்திருந்தார்.
இம்மாதம் 16ம் தேதி முற்பகலில், இந்திராலி ரயில் நிலையத்தில் இறங்கினார். குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்றவுடன், பொருட்களை சரிபார்த்தனர். நகைகள் வைத்திருந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தனர்; தங்க நகைகளை காணவில்லை. அதிர்ச்சியில் உறைந்தனர்.
சூட்கேஸில் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 900 கிராம் தங்க நகைகளை வைத்திருந்தார். நகைகள் இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக, அதன் மீது துணிகளை வைத்து மறைத்துள்ளனர். ஆனால், சூட்கேஸை சரியாக பூட்டவில்லை. ஜிப் மட்டும் பயன்படுத்தி மூடி உள்ளனர்.
இதுகுறித்து, மணிப்பால் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில், 'பன்வெல் - கன்காவலி ரயில் நிலையங்களுக்கு இடையில் திருட்டு நடந்திருக்கலாம்' என தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.