ராஜபாளையம் தென்றல் நகரில் --பஸ் வசதி இன்றி மக்கள் தவிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகர் சமத்துவபுரம் பகுதிகளில் குடியிருந்து வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத் தோப்பு ரோட்டில் 15 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

நகர் பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்களுக்கு செல்ல முறையான அரசு பஸ் போக்குவரத்து, மினிபஸ் வசதி இல்லை.

குறிப்பாக அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், ராம் நகர், இந்திரா நகர், பச்சை காலனி, சக்தி நகர், சாஸ்திரி நகர், பேங்கர்ஸ் காலனி, தென்றல் நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல ஆட்டோக்கள் மட்டுமே ஒரே வழி. ஆட்டோக்களில் அவசரத்திற்கு வந்து செல்ல ரூ.200 வரை கட்டணம் ஆகிறது.

இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளி, இரண்டு மகளிர் கல்லுாரிகள் என அமைந்துள்ளதுடன் பள்ளி நேரங்களில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கும் அரசு பஸ் போன்ற வாகன வசதி இன்றி தவிக்கின்றனர். வசதி வேண்டி தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement