எந்த கட்சியோடும் கூட்டணி பேசவில்லை; சொல்லிவிட்டார் ஜெயக்குமார்!

2

சென்னை: சட்டசபை தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் இதுவரை கூட்டணி பேச்சு நடத்தவில்லை என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.



ஒரு கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், நடிகர் விஜய் பற்றிய பேச்சுகள் தான் அரசியல் அரங்கில் தொடர்ந்து ஒலித்து வருகிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டி என்ற அறிவிப்புடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஜரூரான அரசியல் கள வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

இப்போது வரை நேரிடையாக எந்த தேர்தலையும் சந்தித்து இல்லை. கட்சிக்கு என்று ஒரு எம்.எல்.ஏ., எம்.பி., ஏன் ஒரு வார்டு கவுன்சிலரும் கூட இல்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்து புது பார்முலாவை அறிமுகப்படுத்த தமிழக அரசியலில் அதுபற்றிய பேச்சுகள் இன்னமும் ஓயவில்லை.

அ.தி.மு.க.,வுடன் சீட் பேரம், துணை முதல்வர் பதவி என்றெல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களில் ஆதாரமில்லை, த.வெ.க., அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்கவில்லை, அந்த தகவல்களில் உண்மையில்லை, ஆதாரமற்றது என்று நடிகர் விஜய் தரப்பு அறிவித்துவிட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க.,வின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் சீனியரும், மாஜி அமைச்சருமான ஜெயக்குமார் புதிய விளக்கம் ஒன்றை கூறி உள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறி இருப்பதாவது;

16வது நிதிக்குழு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறது. அ.தி.மு.க., தரப்பில் நான் பங்கேற்று மனு ஒன்றை அளித்துள்ளேன். மத்திய அரசுக்கு பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. ஆனால் மாநில அரசுகளுக்கு வரி பகிர்வை குறைவாக தருகிறது. எனவே, வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்று நடிகர் விஜய் அறிவித்தது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவான பதில் தந்துவிட்டார். பா.ஜ., அல்லாத ஒத்த கருத்துள்ள கட்சிகள், அதாவது தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணிக்கு வரலாம்.

தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி பற்றி பேசப்படும். தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளது. எங்கள் தலைமையிலான கூட்டணியை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ, அந்த கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த கட்சிகளுடனும் அ.தி.மு.க., பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement