சாத்துாரில் ஜங்ஷனில் நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்
சாத்துார்: சாத்துார் படந்தால் ஜங்ஷன் நான்கு வழிச் சாலை சந்திப்பில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
சாத்துார் படந்தால் ஜங்ஷன் நான்கு வழிச்சாலை சந்திப்பில் பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர், அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பஸ்கள் காலை மாலை நேரங்களில் அதிக அளவில் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.
நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் பயணிகள் நிழற்குடை வசதி உள்ளது இதன் அருகில் பஸ்கள் நின்றால் பயணிகள் எளிதாக ஏறிச் செல்ல வசதியாக இருக்கும். ஆனால் ஆம்னி பேருந்துகள் அரசு விரைவு பேருந்துகள் பைபாஸ் ரைடர் பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்கள் சர்வீஸ் ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்குடைக்கு அருகில் சென்று நிற்காமல் நான்கு வழிச்சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்று இறக்கி செல்கின்றனர்.
திருவேங்கடம், வெம்பக் கோட்டை, தாயில் பட்டி சிவகாசி, ஆலங்குளத்தில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் படந்தால் ஜங்ஷனில் நான்கு வழிச்சாலையை கடந்து நகருக்குள் வரவேண்டிய நிலை உள்ளது.இந்த நிலையில் நான்குவழிச் சாலையில் வேகமாக வரும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் இந்த பகுதிக்கு வரும்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நான்கு வழிச்சாலையில் இருபுறமும் மதுரையில் இருந்து வரும் பஸ்களும் கோவில்பட்டியில் இருந்து வரும் பஸ்களும் நிறுத்தப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.இதன் காரணமாக இரு பக்கமும் உள்ள சர்வீஸ் ரோட்டில் செல்லும் வாகனங்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் முன்னால் நிற்கும் வாகனத்தின் மீது மோதி விபத்துகளும் அடிக்கடி நேரிடுகிறது.இது போன்ற விபத்து நேரிடும் போது பயணிகளும் சிதறி ஓடுகின்றனர்.
போக்குவரத்து போலீசாரும் நெரிசலை தவிர்க்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சர்வீஸ் ரோடு அகலம் குறைவாகவும் நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இருப்பதால் நான்கு வழிச்சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை டிரைவர்கள் ஏற்றி இறக்கி செல்கின்றனர்.
பஸ் நிறுத்தம் உள்ள இந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். நான்கு வழிச்சாலை பஸ்கள் நிற்பதால் ஏற்படும்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.