அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை சபாநாயகரிடம் உரிமை மீறல் மனு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி அரசு விழாக்களில் தன்னை அரசு அதிகாரிகள் அழைப்பிதழ் கொடுத்து கூப்பிடுவதில்லை என சபாநாயகர் செல்வத்திடம் பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு உரிமை மீறல் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியின் நியமன எம்.எல்.ஏ.,வாக கடந்த 2021ம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்டு மக்கள் பணியை செய்து வருகிறேன். முதலியார்பேட்டை தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தை நடத்தி வருகின்றேன். முதலியார்பேட்டை தொகுதியில் தான் எனது வாக்காளர் அட்டையும் உள்ளது. ஆனால் முதலியார்பேட்டை சட்டசபை தொகுதியில் நடக்கின்ற எந்த ஒரு அரசு விழாக்களுக்கும் எனக்கு அழைப்பிதழ் வழங்குவதில்லை.

மேலும், எனது பெயரும் அழைப்பிதழில் இடம் பெறுவதில்லை. அதனை நான் பல முறை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். ஆனால் இன்று வரை அரசு அதிகாரிகள் அதனை பின்பற்றுவதில்லை. நேற்று சுதானா நகர் நீர்தேக்க தொட்டி திறப்பு விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம் பெறவில்லை. இது எம்.எல்.ஏ.,விற்கு உண்டான எனது உரிமையை பறிக்கும் செயலாகும். ஆகவே தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இனி வரும் காலங்களில் முதலியார்பேட்டை தொகுதியில் நடக்கும் அனைத்து அரசு விழாக்களில் எனது பெயரை அழைப்பிதழில் இடம் பெற செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.,விற்கு உண்டான உரிமையை வழங்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement