00 ஆண்டுகள் புதைந்திருந்த சிவன் கோவில் நந்தியின் வாய் வழியாக வெளிவரும் புனிதநீர்

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என முன்னோர்கள் சொல்வது உண்டு.

இந்த சொல்லுக்கு ஏற்றார்போல கர்நாடக தலைநகரான பெங்களூரில் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க, பழங்கால, புராதன கோவில்கள் உள்ளன.

பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ளது காடு மல்லேஸ்வரா கோவில். இதன் அருகே உள்ள கங்கம்மா கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சிறிய கோவில் இருக்கும். அந்த கோவிலை ஸ்ரீ தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

* பல தீர்த்தம்

நந்தி தீர்த்தம், நந்தீஸ்வரர் தீர்த்தம், சவ தீர்த்தம், மல்லேஸ்வரம் நந்திகுடி என்ற பெயரிலும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. கோவிலில் முக்கிய தெய்வமான சிவன், லிங்கம் வடிவில் அருள்பாலிக்கிறார். தட்சிண நந்தி என்றால் தெற்கு நோக்கிய நந்தி என்று பொருள்படும்.

கன்னடத்தில் 'தீர்த்தா' என்று குறிப்பிடுவது புனித நீராக கருதப்படுகிறது. கோவிலில் உள்ள நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேறுகிறது. இந்தத் தண்ணீர் சிவலிங்கத்தின் மீது விழுந்து கோவிலின் நடுவில் உள்ள ஒரு படிக்கட்டு தொட்டியில் பாய்கிறது.

நந்தியின் வாயில் இருந்து விழும் தண்ணீருக்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. இது இந்த கோவிலின் ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

* மண்ணில் புதைப்பு

கி.பி., 1882ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோவில், ஒரு கட்டத்தில் பயன்பாடு இன்றி போனது. மெதுவாக புதையுண்டது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் புதையுண்ட நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க சிலர் முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் மண்ணில் புதையுண்ட கோவிலை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி போராட்டமும் நடத்தினர். இதன் விளைவாக நிலம் தோண்டப்பட்டு கோவில் மீட்கப்பட்டது.

தற்போது கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய தெய்வங்களுடன் தொடர்புடைய அனைத்து பாரம்பரிய விழாக்கள், நிகழ்ச்சிகள் கோவிலில் கொண்டாடப்படுகின்றன.

இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி பூஜை, பிரதோஷ கால பூஜை, கார்த்திகை மாத சோமவார பூஜைகள் நடக்கின்றன. மஹா சிவராத்திரி அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.

எப்படி செல்வது?

சிவாஜி நகரில் இருந்து மல்லேஸ்வரத்திற்கு நேரடி பஸ்கள் இல்லை. சிவாஜி நகரிலிருந்து 79ஜி பஸ்சில் பயணம் செய்தால், பாலேகுந்ரி சதுக்கம் (இந்தியன் எக்ஸ்பிரஸ்), தலைமை போஸ்ட் ஆபீஸ், ராஜ்பவன், சாளுக்கியா சதுக்கம், சேஷாத்திரிபுரம் கல்லுாரி சென்று, அங்கிருந்து 255 என்ற எண் பஸ்சில் ஏறி மல்லேஸ்வரம் சதுக்கம், சம்பிகே ரோடு வழியாக சென்று, மல்லேஸ்வரம் 11வது கிராசில் இறங்க வேண்டும். சிவாஜி நகரில் இருந்து 129 பஸ்சில் சென்றால் மெஜஸ்டிக் செல்ல வேண்டும். அங்கிருந்து பீன்யா, நெலமங்களா செல்லும் பஸ்களில் சென்று மல்லேஸ்வரத்தில் இறங்கிக் கொள்ளலாம்.***

Advertisement